பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள்
Rs. 2,500.00
கி.மு. 300ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1200ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்காலம் பெளத்த மதம் தமிழர்கள் பேணிய முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கி வந்திருக்கிறது. மணிமேகலை, குண்டலகேசி, உதயணன் காதை, பிம்பிசாரம், சித்தாந்தத் தொகை, குடாமணி, திருப்பதிகம், வீரசோழியம் போன்ற பெளத்த காப்பியங்களைப் படைத்துத் தமிழ் பெளத்த அறிஞர்கள் தமிழன்னையை அழகூட்டிய காலம் அது!
பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் பெளத்தத்திற்குமிடையே இருந்த தொடர்புகள் அற்றுப்போய் இன்று எட்டு நூற்றாண்டுகளாகிவிட்ட போதிலும் – கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, பிறன் மனைவிமேல் ஆசை கொள்ளாமை போன்ற பல வாழ்வியல் கோட்பாடுகளைச் சைவ மதத்திற்கு கொடுத்துவிட்டே பெளத்தம் நம்மைவிட்டுப் பிரிந்துபோனது.
பெளத்தத்தின் பெயரால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைத்த அட்டூழியங்களைத் தொடர்ந்து இன்றைய தமிழர்கள் பெளத்தத்தை ஒருவிதமான வெறுப்புணர்வுடன் பார்ப்பது தவிர்க்க முடியாதுள்ளது. ஆனாலும், அச் செயல்கள் பெளத்த மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதையும், வரலாற்றுக் காலத்தில் தமிழ் மக்கள் பெளத்தத்திற்காகச் செய்த கொடையையும், பெளத்தம் தமிழர் நாகரிகத்திற்குத் தந்த பங்கையும் எடுத்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும். 01-02-2004 முதல் 01-05-2005 வரை 65 வாரங்கள் கொழும்பிலிருந்து வெளிவந்த ‘வீரகேசரி’ வார மலரில் தொடராக வெளிவந்த பலநூற்றுக்கணக்கான வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற இக்கட்டுரைத் தொடர் இப்போது உங்கள் கைகளில் நூலுருவில் தவழ்கிறது.
